திருவாரூர், ஏப்.1: திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த அனைவருக்கும் கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்க ரூ. 1800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

திருவாரூரில் நாகை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தாழை ம. சரவணன் மற்றும் திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். ஜீவானந்தம், சீர்காழியில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆசைமணி ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தீவிர பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தின் போது அவர் பேசியதாவது:-

காவிரி இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட திமுக எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. இதனால், விவசாயிகள் 10 ஆண்டு காலத்தில் உரிய லாபம் கிடைக்காமல் தவித்தனர். பின்னர், ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா உச்சநீதிமன்றம் சென்று போராடி வென்று விவசாயிகளின் உரிமையை காத்தார். 50 ஆண்டு காலம் தீர்க்க முடியாத காவிரிப் பிரச்னையை உச்சநீதிமன்றம் சென்று சட்டப் போராட்டம் நடத்தி நமக்கு கிடைக்க வேண்டிய உரிமையை பெற்றுத் தந்தது தற்போதைய அதிமுக அரசு. காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று வாரியம் இவற்றை அமைக்க உறுதுணையாக இருந்தது அதிமுக அரசு. கோதாவரிநீகாவிரி இணைப்பு திட்டம் எவ்வளவு செலவானாலும் செயல்படுத்தப்படும்.

திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த அனைவருக்கும் கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும். இதற்கென ரூ. 1800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் உள்ள மடப்புரம், சீனிவாசபுரம் ஆகியப் பகுதிகளில் புதிய பாலம் கட்டப்படும். திருவாரூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் முதியோர் சிறப்புப் பிரிவுகள் தொடங்கப்படும். மக்களின் துன்பங்கள் எதுவாயினும் இந்த ஆட்சியில் தீர்க்கப்படும். ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் எங்கள் பணியை தடுத்து நிறுத்த முடியாது.
இவ்வாறு முதல்வர் பேசினார்.