சென்னை, ஏப்.8: செல்போனை தர மறுத்ததால் ஹோட்டல் தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்தது தொடர்பாக 2 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும், ஒருவர் கோர்ட்டில் சரணடைந்துள்ளார். மயிலாடுதுறையை சேர்ந்தவர் ராஜகண்ணன் (வயது 23). இவர், பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் வீடு எடுத்து தங்கி, அங்குள்ள தனியார் ஹோட்டலில் சர்வராக பணியாற்றிவந்தார். இதனிடையே, கடந்த சில தினங்களுக்குமுன்பு, பொழிச்சலூர் டாஸ்மாக் கடை அருகே நின்றுக்கொண்டு இருந்த ராஜகண்ணனிடம், செல்போனை கேட்ட 4 பேர் கொண்ட மர்மகும்பல், அதனை தர மறுத்த ராஜகண்ணனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளது.

இதில், படுகாயமடைந்த ராஜகண்ணன், சென்னை ராஜீவ்காந்தி மருத்துமனையில் சிகிச்சை பலனின்றி 6-ம் தேதி உயிரிழந்தார். இதனை கொலை வழக்காக மாற்றி, சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் பரகத்துல்லா, சப்-இன்ஸ்பெக்டர் ஹயாத் ஆகியோருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், பொழிச்சலூரில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த லோகேஷ் (வயது 18) என்பவரை இன்று அதிகாலை 2.30 மணியளவில் கைது செய்தனர். இவர் அளித்த தகவலின்பேரில், ரோஹித் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே, இந்த வழக்கில் தேடப்பட்டுவந்தவர்களில் லட்சுமணன் (வயது 30) என்பவர், செங்கல்பட்டு கோர்ட்டில் இன்று சரணடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.