திருச்சி,ஏப். 8: திருச்சியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் தொழில் அதிபர், வியாபாரியிடம் இருந்து ரூ.1லட்சம் மற்றும் வெளி நாட்டு பணம் பறிமுதல் செய்யப் பட்டது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்ப தற்காக தேர்தல் ஆணை யத்தின் உத்தரவுப்படி அமைக்கப் பட்டுள்ள பறக்கும் படை அதிகாரிகள் திருச்சியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் திருச்சி உடையான் பட்டி ரெயில்வே கேட் அருகே நேற்று மாலை மண்டல துணை வட்டாட்சியர் தாமஸ்ஜஸ்டின் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் ஓலையூரில் இருந்து வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்தகாரில் தொழில் அதிபர் முகமது அபுபக்கரிடம் ரூ.68 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 702 சவுதி அரேபியா நாட்டு ரியால் ஆகியவற்றிற்கு எந்த வித ஆவணத்தையும் சமர்ப்பிக்காததால் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருச்சி கிழக்கு தாசில்தார் சண்முக வேலனிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் அரியமங்கலத்தில் பறக்கும் படை நடத்திய சோதனையில் அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டையை சேர்ந்த பூ வியாபாரி பொன்னுசாமியிடமிருந்து ரூ.57 ஆயிரத்து 100 க்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர்.இந்த பணத்தையும் திருச்சி கிழக்கு தாசில்தார் சண்முகவேலனிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.