பொள்ளாச்சி, ஏப்.7:
பொள்ளாச்சியில் கல்லூரி மாண வியை காரில் கடத்தி கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூர சம்பவத்தில் கொலையாளிகள் பற்றிய அடையாளம் தெரிந்துள்ளது. இவர்களை பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு இருப்பதாக உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இதனிடையே முன்னாள் காதலன் சதீஷ்குமார் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக் கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்
சாமி. பைனான்சியர். இவருடைய மகள் பிரகதி (20). இவர் கோவை ஆவாரம் பாளையம் ரோட்டில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

கல்லூரி விடுதியில் தங்கி இருந்த இவர் நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். காட்டூர் போலீசார் மாணவி மாயம் என்று வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிப்பட்டியில் ரோட்டோரத்தில் 20 வயது மதிக்
கத்தக்க இளம்பெண் ஒருவர் நேற்று மாலை 4 மணிக்கு அரை நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தார். இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இதற்கிடையில் ஓட்டன்சத்திரத்தில் இருந்து அந்த வழியாக காரில் கேரளா மாநிலம் சாலக்குடிக்கு சென்ற கோமதி என்ற பெண் ரோட்டோரத்தில் பொதுமக்கள் கூட்டமாக நிற்பதை பார்த்தார். இதையடுத்து தனது கணவர் கார்மேகத்தை காரை நிறுத்த சொல்லிவிட்டு, இறங்கி சென்று பார்த்தார். அப்போது அங்கு இறந்துகிடப்பது தனது சொந்த ஊரான ஓட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை  சேர்ந்த வெள்ளைசாமி என்பவருடைய மகள் பிரகதி என்று உறுதி செய்தார்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், இந்த கொலையில் ஈடுபட்ட கொலையாளிகள் தொடர்பான முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. எனவே கொலை யாளிகளை விரைவில் பிடித்து விடுவோம். அவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தனர். இதனிடையே இன்று காலை முன்னாள் காதலன் சதீஷ்குமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.