பெங்களூரு, ஏப்.6:
நடப்பு சீசன் தங்கள் அணிக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும், இருப்பினும் எதிர்வரும் ஆட்டங்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

நேற்றைய ஐபிஎல் போட்டியில் சொந்தமண்ணில் களமிறங்கிய பெங்களூரு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் தோல்விக்கண்டது.
இது குறித்து, கேப்டன் கோலி கூறுகையில், கடைசி 4 ஓவர்களில் எங்களது பவுலிங் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. இன்னும் நாங்கள் கூடுதல் அறிவு கூர்மையுடன் செயல்பட்டிருக்க வேண்டும்.

இக்காட்டான ஓவர்களில் தைரியத்துடன் பந்துவீசாமல் இருந்தால், ரஸ்ஸல் போன்ற அதிரடி வீரர்களை சமாளிப்பது கடினமாகதான் அமையும். எந்தப்புள்ளியில் ஆட்டம் கைமாறியது என்று கணிக்கமுடியவில்லை. அணியுடன் கலந்தாலோசித்தால் மட்டுமே இதற்கான தீர்வை கண்டறியமுடியும். நடப்பு ஐபிஎல் சீசன் தங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

இருப்பினும் எதிர்வரும் வாய்ப்புகளை (ஆட்டங்களை) நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம். எங்கள் மீது நாங்கள் கொண்டுள்ள தன்னம்பிக்கை, சுற்றியுள்ள பாதக சூழ்நிலையை நிச்சயம் மாற்றும், என்று கோலி நம்பிக்கை தெரிவித்தார்.