முருகதாஸ் படத்தில் ரஜினிகாந்த் மகளாகும் பிரபல நடிகை

சினிமா

‘பேட்ட’ படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க தயாராகி உள்ளார். ரஜினியின் 166-வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 10–ந் தேதி மும்பையில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் ரஜினியின் மகளாக நடிக்க பிரபல நடிகை நிவேதா தாமஸ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக படத்தில் வரும் ரஜினியின் தோற்றத்தை புகைப்படம் எடுக்கும் பணி கடந்த வாரம் நடந்தது. இதில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியல், தாதாக்கள், அதிரடி என்று விறுவிறுப்பாக திரைக்கதையை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
ஒரு மாதம் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பை நடத்துகின்றனர். இடையில், வருகிற 18-ந் தேதி மட்டும் சென்னை வந்து ஓட்டு போட்டு விட்டு மீண்டும் மும்பை சென்று படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். ரஜினியின் கதாபாத்திரம் சமூக வலைத்தளங்களில் வெளியாவதை தடுக்க படப்பிடிப்பில் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.