வெற்றி பெறும் முனைப்பில் சி.எஸ்.கே.: பஞ்சாப்புடன் இன்று மோதுகிறது

விளையாட்டு

சென்னை, ஏப்.6:
பஞ்சாப்புக்கு எதிராக சென்னையில் இன்று நடக்கும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை அணி வெற்றி பெறும் முனைப்புடன் களம்காண்கிறது.

சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. வெற்றியுடன் நடப்பு சீசனை தொடங்கிய சென்னை அணி, ஹாட்ரிக் வெற்றிகளை பெற்றது. யார் கண் பட்டதோ, அடுத்த போட்டியிலேயே மும்பை அணியிடம் வீழ்ந்தது. தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்த சம்பவத்திற்கு, இன்றைய போட்டியில் வென்று பதிலடிக்கொடுக்கும் என்பதே சென்னை ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அதேசமயம், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றிகளை பெற்றுள்ளது. சென்னைஅணியை போன்றே அந்த அணியிலும் அஸ்வின், முஜீப் உர் ரஹ்மான், முருகன் அஸ்வின், வருண் சக்கரவர்த்தி என தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

இரு அணிகளும் இதுவரை விளையாடிய 20 ஆட்டங்களில் 12-ல் சென்னை அணியும், 8-ல் பஞ்சாப் அணியும் வெற்றிப்பெற்றுள்ளது. அதேபோல், சேப்பாக்கத்தில் இவ்விரு அணிகளும் விளையாடிய 5 போட்டிகளிலும் சென்னை அணியின் (3) ஆதிக்கமே இருந்துள்ளது, குறிப்பிடத்தக்கது. கடந்த சீசனுக்கு முந்தைய காலத்தில் சென்னை அணிக்காக விளையாடிய அஸ்வின், பஞ்சாப் அணி கேப்டனான பின்னர், தற்போதுதான் முதல்முறையாக சென்னை அணியை எதிர்த்து அதன் தாய் மண்ணில் விளையாடவுள்ளது, கவனிக்கத்தக்கது.