வீட்டின் கூரை இடிந்து தாய், மகள் உயிரிழப்பு

சென்னை

சென்னை, ஏப்.6:
புளியந்தோப்பு பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய் மற்றும் 7 வயது மகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பபை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை புளியந்தோப்பு அடுத்த கன்னிகாபுரம், வெங்கடேசபுரம், புதிய காலனி பகுதியில் வசிப்பவர் வெங்கடேசன் (வயது 35). இவர் தனியார் மொபைல் நிறுவனத்தில் சிம்கார்டு விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி சங்கீதா (வயது 31). இவரது மகள் யுவஸ்ரீ (வயது 7). அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். மகன் மோகன்ராஜ் (வயது 3) ஆகியோர் உள்ளனர். நேற்றிரவு வழக்கம்போல் அனைவரும் வீட்டினுள் படுத்து உறங்கிக்கொண்டு இருந்தனர்.

இந்த வீடு தரை தளத்துடன் சேர்த்து 3 மாடிகளை கொண்டது. 3 மாடிகளிலும் 10 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தரை தளத்தில் உள்ள ஒரு வீட்டில் வெங்கடேஷன் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வீட்டின் மேற்கூரையில் கம்பி தெரியும் அளவிற்கு விரிசல் இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் வீட்டின் மேல்கூரையில் இருந்த விரிசல் பகுதி உடைந்து தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் மீது விழுந்தது.

இதில் சங்கீதா மற்றும் மகள் யுவஸ்ரீ ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து  சென்றனர்.

ஆனால் வழியிலியே யுவஸ்ரீ மற்றும்
சங்கீதா ஆகிய இருவரும் உயிரிழந்தனர். காயமடைந்த வெங்கடேசன் மற்றும் மோகன் குமார் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.