சென்னை, ஏப்.5:
பரங்கிமலையில் குடிபோதையில் நண்பனை கொலை செய்து புதைத்தவர் கைது செய்யப்பட்டார். வாட்ஸ்-அப் தகவல் மூலம் இந்த வழக்கில் போலீசார் துப்புதுலக்கி உள்ளனர்.

பரங்கிமலையில் கலைஞர் நகர் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள உரக்கிடங்கு அருகே முட்புதரில் ஒரு வாலிபரின் சடலம் புதைக்கப்பட்டு இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் கொடுத்த தகவலின் பேரில் உதவி கமிஷனர் கோவிந்தராஜ், இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் பல்லாவரம் தாசில்தார் ஹேமலதா ஆகியோர் முன்னிலையில் முட்பு தரைத் தோண்டி சடலம் வெளியே எடுக்கப்பட்டது. அது 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் என்பது தெரியவந்தது. மேலும் கொலை செய்யப்பட்டவர் பழவந்தாங்கல் பக்தவச்சலம் நகரைச் சேர்ந்த குபேஷ் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக வாட்ஸ்-அப் தகவல்களை வைத்து போலீசார்  விசாரணை நடத்தினர். இதில் சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் பழவந்தாங்கலில் குபேஷ், ஆனந்த், அப்பு மார்ட்டின், கார்த்திக் ஆகிய 4 நண்பர்கள் மது அருந்தியதாகவும், அப்போது குபேஷின் ரூ.34 ஆயிரம் பணத்தை மார்ட்டின் என்பவரிடம் கொடுத்ததில் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் குபேஷ் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து ஆனந்த் (வயது 27) என்பவர் வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பிய பின்னர் புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி மற்ற இருவரை தேடி வருகிறார்கள்.