சென்னை, ஏப்.5:
செல்போனை தர மறுத்ததால் ஹோட்டல் தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
மயிலாடுதுறையை சேர்ந்தவர் ராஜகண்ணன் (வயது 23). கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த இவர், பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் உள்ள தனியார் ஹோட்டலில் சர்வராக வேலைக்கு சேர்ந்தார். பொழிச்சலூர் பிரேம் நகரில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி வந்துள்ளார்.

இவர், நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் பொழிச்சலூர் டாஸ்மாக் கடை அருகே நின்றுக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்மகும்பல், ராஜகண்ணனிடம் செல்போனை தரும்படி கேட்டுள்ளனர். இதற்கு, மறுப்பு தெரிவித்த ராஜகண்ணனை, அந்த கும்பலில் ஒருவர் கத்தியால் குத்தியதில், அவரது வயிற்றில் படுகாயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். இதனை, தடுக்க முயன்ற ராஜகண்ணனின் நண்பருக்கும் இடது கையில் லேசான வெட்டு விழுந்துள்ளது.

உடனடியாக, அங்கிருந்தவர்கள் ராஜகண்ணனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இடது பக்க விலாவில் கத்திக்குத்து காயமடைந்த அவரை, மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். இந்த நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி ராஜகண்ணன் உயிரிழந்தார். இது குறித்து, சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்த நிலையில், இதனை தற்போது, கொலை வழக்காக மாற்றி, தப்பியோடிய மர்மகும்பலை தேடிவருகின்றனர்.

செல்போனுக்காக வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.