உயர்நீதிமன்றத்தில் ஜே.கே.திரிபாதி ஆஜர்

சென்னை

சென்னை, ஏப்.5:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய கைரேகை உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு நடந்த விவகாரத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தேர்வாணையத்தின் தலைவர் ஜே.கே.திரிபாதி இன்று உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது தரப்பில் ஆஜரான வக்கீல் முறைகேடு விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுத்திருப்பதாக விளக்கம் அளித்தார்.

இதையடுத்து விசாரணை பிற்பகலுக்கு தள்ளி வைக்கப்பட்டது. சீருடைப் பணியாளர் ஆணையம் நடத்திய கைரேகைப் பிரிவு உதவி ஆய்வாளர் பணி எழுத்துத் தேர்வில், தான் எழுதிய சரியான பதிலுக்கு உரிய மதிப்பெண் வழங்க கோரி காவலர் அருணாச்சலம் என்பவர் தொடர்ந்த வழக்கில், தேர்வாணையத் தலைவர் டிஜிபி திரிபாதி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, தேர்வாணையத் தலைவர் திரிபாதி கோர்ட்டில் ஆஜரானார். அவர் தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, சென்னை பல்கலைக்கழக ஆலோசகராக இருந்த ஜி.வி.குமார் பரிந்துரையின் பேரிலேயே மூர்த்தியை நியமித்தோம். பல்கலைக் கழகம் பரிந்துரைத்த 18 பேர் இந்த பணியை ஏற்க மறுத்தாலேயே இறுதியில், மூர்த்தி நியமிக்கப்பட்டார்.

மூர்த்தியின் முகநூலின் பக்கத்திலேயே அவர் ஐஐடி யில் பணிபுரிவதாக தான் குறிப்பிட்டுள்ளார். இந்த மோசடி தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆலோசகர் ஜி.வி.குமார் கைது செய்யப்படுள்ளார் என்று தெரிவித்தார். ஆலோசகர் ஜி.வி.குமாரை தனி அறையில் வைத்து, வெத்து பேப்பரில் கையெழுத்து பெற்று கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என்று அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.

அப்போது நீதிபதி, இந்த மோசடி தொடர்பாக என்ன விசாரணை நடைபெற்றது? இதுபோன்ற தேர்வுகளில் வினாத்தாள் தயாரிப்பது தவிர, மற்ற அனைத்து நடைமுறைகளிலும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கடும் தண்டனை பெற வேண்டும். இல்லாவிட்டால், மக்கள் நம்பிக்கையை இழந்து விடுவார்கள் என்று கருத்து தெரிவித்தார்.

பின்னர், விசாரணையை மீண்டும் பிற்பகலுக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.