சென்னை, ஏப்.7:  வரும் 18-ந் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தல் நடவடிக்கை
சென்னையில் இன்று தொடங்கியது. ராயபுரத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் சுமார் 150 அதிகாரிகள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.  மக்களவைக்கு வரும் 11-ந் தேதி தொடங்கி மே 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18-ந் தேதி ஒரே நாளில் வாக்குப்பதிவு நடக்கிறது.
தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் துணை ராணுப் படையினர் தங்கள் வாக்குகளை தபால் ஓட்டு மூலம் செலுத்துவது வழக்கம். அந்த வகையில் முதல் தபால் ஓட்டுப் பதிவு நேற்று அருணாச்சலப்பிரதேசம் ரோகித்பூரில் நடைபெற்றது. இதில் இந்தியா-திபெத் எல்லையில் ராணுவ வீரர்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதையடுத்து பிற மாநிலங்களில் தபால் வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியது.
வடசென்னையில் ராயபுரத்தில் மேற்கு மாதவன் தெருவில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை அதிகாரி களுக்கான பயிற்சி வகுப்பு நடை பெற்றது. 12 மணி அளவில் இந்த பயிற்சி முடிவடைந்ததும் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் தபால் வாக்குகளை செலுத்தினர்.
இங்கு வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டியில் வாக்குச்சீட்டுக்களை செலுத்தினர். வழக்கம் போலவே அவர்களது கை பெருவிரலில் அடையாள மை இடப்பட்டது. ஒவ்வொருவரும் ரகசிய அறையில் சென்று வாக்குச்சீட்டில் சீல் வைத்து பெட்டிகளில் செலுத்தினர். சுமார் 150 அதிகாரிகள் தங்களது வாக்குகளை செலுத்தினார்கள்.
இதேபோல், பிற மாவட்டங்களிலும் தபால் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குகள் அனைத்தும் மே 23-ந் தேதி வாக்கு எண்ணும் போது சேர்த்து எண்ணப்படும்.