எருமையூர் குவாரியில் இருந்து குடிநீர் சப்ளை

சென்னை

சென்னை, ஏப்.5:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளும் முற்றிலும் வறண்டு விட்டதால் புதிதாக தாம்பரம் அருகே உள்ள எருமையூர் கால்குவாரியில் இருந்து குடிநீர் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை பற்றாக் குறையாக பெய்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 4 ஏரிகளும் இந்த ஆண்டு நிரம்பவில்லை.

தற்போது கோடை தொடங்கிவிட்ட தால் 4 ஏரிகளும் முற்றிலுமாக வறண்டுவிட்டன. ஏரியின் நிலப் பகுதியில் கீரை, காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன. தற்போது சிக்கராயபுரம் கல் குவாரியில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் இது போதாது என்பதால் தாம்பரம் அருகே உள்ள எருமையூர் குவாரிகளில் இருந்தும் தண்ணீர் எடுப்பதற்கு பெருநகர குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக குழாய் அமைக்கும் பணி அடுத்த வாரத்தில் தொடங்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

சிக்கராயபுரத்திற்கும், எருமையூ ருக்கும் இடையே 8 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது. சிக்கராயபுரத்தில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரி 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. எனவே எருமையூர் குவாரி தண்ணீர் 18 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து செம்பரம்பாக்கம் ஏரியை வந்தடைய வேண்டும்.
மேலும் எருமையூர், சிக்கராயபுரம், செம்பரம்பாக்கம் ஆகியவை அவுட்டர் ரிங் ரோட்டில் அமைந்துள்ளதால் குழாய் பதிக்கும் பணி எளிதாக இருக்கும் என அதிகாரிகள் கருது கின்றனர்.

எருமையூர் அருகே உள்ள குவாரிகளில் உள்ள தண்ணீரில் பொதுமக்கள் இறங்குவது இல்லை என்பதால் இவை சுத்தமாக இருக் கிறது என்றும், இதை சுத்திகரிக்க தேவையில்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.இப்பகுதியில் உள்ள 5 குவாரிகளில் 40 மீட்டர் ஆழத்துக்கு தண்ணீர் உள்ளது. தற்போது சென்னை நகரத்துக்கு நாள்தோறும் 1200 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

தற்போது சிங்கராயபுரம் குவாரியில் இருந்து 10 எம்எல்டி தண்ணீர் எடுக் கப்படுகிறது. எருமையூர் குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்படும் பட்சத்தில் தேவையை ஓரளவுக்கு பூர்த்தி செய்ய முடியும் என மெட்ரோ வாட்டர் நிர்வாகம் கருதுகிறது.