மளிகை கடைக்காரர் வீட்டில் மர்மகும்பல் கைவரிசை

சென்னை

சென்னை, ஏப்.3: கொரட்டூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து மளிகைக் கடைக்காரர் வீட்டில் ரூ.3 லட்சம் ரொக்கம், வீட்டின் அசல் பத்திரம் உள்ளிட்டவற்றை சூறையாடி சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

கொரட்டூர் ரெட்டித் தெருவை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 63). இவர் வீட்டின் முன்பக்கம் மளிகைக்கடை வைத்து நடத்திவருகிறார். இந்த நிலையில், நேற்று மாலை இவரது வீட்டிற்கு காரில் வந்த 4 பேர் கொண்ட மர்மகும்பல், ஐடி அதிகாரிகள் என்று கூறி அதற்கு ஆதாரமாக அசோக் என்று பெயர் குறிப்பிடப்பட்ட அடையாள அட்டையையும் காண்பித்துள்ளனர்.

இதனை நம்பி, சிவப்பிரகாசமும் தனது வீட்டில் அதிகாரிகள் ஆய்வு நடத்த அனுமதி அளித்துள்ளார். முடிவில், ரூ.3 லட்சம் ரொக்கம், ஒரு சவரன் செயின், 5 கிலோ வெள்ளி, 2 செல்போன்கள் மற்றும் வீட்டின் அசல் பத்திரத்தையும் அந்த கும்பல் எடுத்துக்கொண்டு, நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வந்து உரிய ஆவணங்கள் காண்பித்து வாங்கிச்செல்லுமாறு கூறிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து, ஐடி அலுவலகத்தில் சென்றதும்தான், சிவப்பிரகாசத்திற்கு, தான் ஏமாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து, கொரட்டூர் போலீசில் அவர் அளித்த புகாரின்பேரில், மர்மகும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.