‘சூப்பர் டீலக்ஸ்’-ல் எனது கேரக்டர் விவாதத்திற்குரியது: சமந்தா

சினிமா

சூப்பர் டீலக்ஸ் படத்தில், நடிகைகள் நடிக்க மறுத்த கதாப்பாத்திரத்தில் தான் நடித்துள்ளதாகவும், படம் ரிலீசானாதும் தனது கேரக்டர் குறித்து பல விவாதங்கள் எழக்கூடும் என்றும் நடிகை சமந்தா கூறியுள்ளார்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யாகிருஷ்ணன், ஃபாஹட் ஃபாசில் உள்ளிட்ட திரையுலக பட்டாளத்துடன் ரிலீசுக்கு ரெடியாகி இருக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்த படத்தில் தான் ஏற்று நடித்துள்ள கதாப்பாத்திரம் குறித்து சமந்தா கூறுகையில், இப்படத்தில் நான் ஃபாஹட் ஃபாசிலின் மனைவியாக நடித்துள்ளேன். 2 நடிகைகளின் நிராகரிப்பிற்கு பின்னரே இந்த கேரக்டர் என்னை தேடிவந்துள்ளது. அவர்கள் ஏன் இந்த கேரக்டரை ரிஜக்ட் செய்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், படம் ரிலீஸ் ஆனதும் எனது கேரக்டர் குறித்து பல்வேறு விவாதங்கள் எழக்கூடும்.

இப்படம் விருதுபெறும் பட்சத்தில், அதன் ஒட்டுமொத்த பெருமையும் இயக்குநர் குமாரராஜவையே சேரும். ஏனெனில், அவர் இயக்கத்தில் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் வெளியான ‘ஆரண்ய காண்டம்’ படம் இன்றளவும் பேசப்படுவதே அதற்கு சான்றாகும். சமீபத்தில் வெளியான ‘கேப்டன் மார்வெல்’ பெண்களை மட்டுமே மையமாக கொண்டு, அவர்களை சூப்பர் வுமன் போன்று பாவித்து கற்பனைக்காட்சிகளுடன் அதிக சண்டைக்காட்சிகளும் நிறைந்த படத்தில் தான் நடிக்க விரும்புகிறேன்.

இதுபோன்ற படம் இந்தியத் திரையிலும் விரைவில் வெளிவரும். மேலும், விளையாட்டை மையமாக கொண்ட திரைக்கதையில் நடிக்க ஆசைப்படுகிறேன். இவ்வாறு, சமந்தா தனது கனவு கதாப்பாத்திரம் குறித்து விருப்பம் தெரிவித்துள்ளார்.